ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்த புளியம்பட்டியில் 'விடியல் அறக்கட்டளை' சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் வசந்த், கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெற்றோர் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதைப் போலவே நூலகத்துக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், "எனது தாய் சிவகாமி, தினமும் என்னை புத்தகங்கள் வாங்கிவர நூலகத்திற்கு அனுப்புவார்கள். அதன் தாக்கம்தான் என்னை இயக்குநராக்கியது" என்றார்.
'டிஜிட்டல் ஃபாஸ்டிங்' முறையில் இணையதளத்திலிருந்து மக்கள் குறைந்தது நான்கு மணி நேரமாவது விலகியிருக்க வேண்டும். அந்த நேரத்தை புத்தகம் படிக்கச் செலவழிக்கலாம் என்று வசந்த் தெரிவித்தார். மேலும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை இந்தச் சிறிய ஊரில் ஏற்படுத்திய விடியல் அறக்கட்டளைக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார். இந்தக் கண்காட்சியில் 20க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பகங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
கல்வி, சமூகம், அறிவியல், வரலாறு, அரசியல் உள்ளிட அனைத்து வகையான புத்தகங்களும் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் விண்வெளிக் கண்காட்சி