ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
முழு ஊரடங்கு
இந்நிலையில் ஓமிக்ரான் பரவல், கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் இன்று இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.மேலும்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய பண்ணாரியம்மன் கோயில்:
இதன் காரணமாக பண்ணாரி அம்மன் கோயில் மூடப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயிலின் பிரதான நுழைவுவாயில் முன்பு கற்பூரம் பற்ற வைத்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு காரணமாக கோயில் வளாகம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலைகளிலும் வாகனம் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் மிகுந்த அமைதி நிலவுகிறது. மேலும் கோயில் வளாகத்தில் உள்ள தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை கடை மற்றும் புகைப்படங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:4ஆவது நாளாக பெய்யும் தொடர் கனமழையால் அந்தியூர் ஏரிகளில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றம்