ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளருக்கு இன்று (ஆக.5) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை மருத்துவக் குழுவினர் சிகிச்சைக்காக கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா ஏற்பட்டதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பொது மக்கள் உள்ளே செல்லாதபடி கயிறுகள் கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் வெளியில் நின்று புகார் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 60 நபர்களுக்கு மருத்துவக் குழுவினர் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் பகுதியில் முதல் முறையாக காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் காவலர்கள் பெரும் பீதியில் உள்ளனர்.