ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பனங்காட்டு பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு (58). கூலித் தொழிலாளியான இவருக்கு வசந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த மகன் சதீஷ்குமார் (28) கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், காதல் திருமணத்தில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், சதீஷ்குமார் மனைவியுடன் சத்தியமங்கலத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பாபு அவரது வீட்டில் தலையில் சரமாரியாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பாபுவின் மகன் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், சம்பவத்தன்று இரவு பாபு அதிகம் மது குடித்துவிட்டு, மனைவி வசந்தாமணியிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் மகன் சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்த சதீஷ்குமார் தந்தையை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது பாபு குடிபோதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த சதீஷ்குமார், வீட்டின் முன்பு கிடந்த கருங்கல்லை எடுத்து சரமாரியாக தந்தையை தாக்கியது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையில் தந்தையை கொலை செய்ததை மகன் சதீஷ்குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை சொந்த மகனே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரோட்டில் யானை தாக்கி தொழிலாளி பலி.. பணி பாதுகாப்பு இல்லை என பழங்குடியினர் சங்கம் குற்றச்சாட்டு!