ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் மலைப்பாம்பு நடமாடுவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் கோயில் வளாகத்தில் நடமாடிய சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடிக்கும் உபகரணத்தை பயன்படுத்தி, லாவகமாக பிடித்து சாக்குப் பையில் போட்டு, வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று மலைப்பாம்பை பாதுகாப்பாக விடுவித்தனர். அருகே பவானி ஆறு உள்ளதால் அந்த ஆற்றின் வழியே நீரில் வந்த பாம்பு கரையேறி கோயிலுக்குள் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பெருமாள் கோயிலுக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:man killed by elephant: யானை தாக்கி மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு