கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்கு வந்து, டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்டு ஈரோட்டில் மத பரப்புரையில் ஈடுபட்ட ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த ஏழு பேர் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தி மத பரப்புரையில் ஈடுபட்டது, நோய் பரப்பியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆறு பேரை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சென்னையிலுள்ள புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் கரோனா தொற்றினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத காலகட்டத்தில் அனுமதியின்றி மத பரப்புரையில் ஈடுபட்ட இவர்கள் கோவை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, இவர்கள் மத பரப்புரை செய்த கொல்லம்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஈரோடு மாநகாரட்சியில் இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் உள்ளிட்ட எழுபது பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் பார்க்க: தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா: ஈரோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை