சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. காட்டு யானைகள் குடிநீர் தேடி பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த சில நாள்களாக பவானிசாகர் அணையின் கரைப் பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக தினமும் வருவதோடு அணையின் கரையோரம் முகாமிட்டு கரையில் உள்ள புற்களை தன் தும்பிக்கையால் பறித்து தின்றபடி நீண்ட நேரம் சுற்றித் திரிகிறது.
பகல் நேரங்களில் ஒற்றை யானை அணையின் கரைப் பகுதியில் முகாமிட்டுச் சுற்றித் திரிவதால் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித் துறை ஊழியர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ப்போர் ஒற்றை யானையைக் கண்டு அஞ்சியபடியே கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றித் திரியும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் எனப் பொதுப்பணித் துறை ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அணைப் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அந்தமானுக்குப் புறப்பட்ட மாணவருக்கு கரோனா!