கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை மற்றும் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால், ஒரு சில வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகினர்.
இதனையறிந்த அரசு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளிடம் அந்தந்த பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து மலிவு விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பவானிசாகர் வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில், விவசாயிகளிடம் வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ருட், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை கொள்முதல் செய்து காய்கறிகள் அடங்கிய தொகுப்புப் பை 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
உழவர் சந்தை விற்பனை விலைக்கு இங்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால், காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளிடம் நியாயமான விலைக்கு கொள்முதல் செய்வதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேவாலய வாசலில் காதல் ஜோடி திருமணம்