பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் பார்வையாளர்களுக்கு இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுப் பேரவை உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் இப்போட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், பி.தங்கமணி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலையில் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் தமிழ்நாடு எங்கும் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள், 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது வரை ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்குப் பல்வேறு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளைப் பிடிக்க முயற்சித்து காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். போட்டியைக் காண ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் வந்திருந்து போட்டியை ரசித்து வருகின்றனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அனுமதிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், தமிழக பாடத்திட்டம் ஏற்கெனவே சுமையாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்டவர்கள் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜல்லிக்கட்டு குறித்து மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் குறுந்தகடுகள் வழங்கப்படும் என்றும், மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதைப் போல் சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனவும் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களைகட்டிய விளையாட்டுப் போட்டிகள்- ஆர்ப்பரித்த மக்கள்