ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து சர்க்கரை மூட்டைகள் ஏற்றிக்கொண்டு கோவைக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது லாரி செண்பகபுதூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அங்குள்ள வளைவில் எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். இதனால் லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியிலிருந்த சர்க்கரை மூட்டைகள் சிதறி, சாலையில் விழுந்துள்ளன.
அப்பகுதி மக்கள் லாரிக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை லேசான காயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சாலையில் சிதறிக்கிடந்த 10 சர்க்கரை மூட்டைகளை யாரோ சிலர் தூக்கிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த காவல் துறையினர், விபத்துக்குள்ளான லாரியிலிருந்த மூட்டைகளை, மற்றொரு லாரியில் ஏற்றி காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். மேலும் காணாமல் போன சர்க்கரை மூட்டைகள் குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது!