ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகிறது. முதல்போக சாகுபடியில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், அரசு சார்பில் இன்று 17 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொடிவேரி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகளின் தேவைக்கேற்ப பாசனப்பகுதியின் அருகில் அமைக்கவேண்டும் எனவும், அரசு நிர்ணயித்துள்ள ஒரு ரூபாய் விலை உயர்வு போதுமானதாக இல்லை என்றும் விவசாயிகளிடையே விவாதிக்கப்பட்டது.
நெல் கொள்முதல் செய்யப்பட்டு 15 நாட்களுக்கு வங்கி கணக்கில் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்பட வேண்டும் எனவும், அரசு சான்றுகள் பெற அலுவலர்கள் உடனடியாக ஆவண செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளிலும் பாசனத்திற்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதால் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை, இயந்திரங்களின் வாடகை ஆகியவை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் வரும் காலங்களில் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தக்கு தடை கோரிய திமுக படுதோல்வியடைந்துள்ளது' - திண்டுக்கல் சீனிவாசன்