'சன் ரைஸ் ஹேக்கத்தான்' என்ற தலைப்பில் ஆந்திர அரசு மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இணைந்து பொறியியல் மாணவர்களுக்கு இடையே போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டின் விவசாயம், குடிநீர் மற்றும் சைபர் கிரைம் ஆகிய துறைகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை நிபுணர்கள் முன்பு காட்சிப்படுத்தினர். 45 குழுக்கள் பங்கேற்ற இந்த போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முதல் பரிசை தட்டி சென்றனர். 'மாசுபட்ட நீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்து குடிநீராக மாற்றும் இயந்திரம் ' ஒன்றை கண்டுபிடித்து, வல்லுனர்களின் முன்னிலையில் அதன் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மாணவர்கள் கூறுகையில், " குடிநீர் தொட்டிகளில் மேற்புறம் நாங்கள் கண்டுபிடித்த இந்த 'நீர் ஆதார்' எனும் கருவியை பொருத்தி அந்த தொட்டியிலிருந்து ஒரு லிட்டர் அளவு நீரை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி நீரின் தன்மை எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறியலாம். பின்னர் அந்த நீரின் விகிதத்திற்கேற்ப இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை கலந்து மாசுப்பட்ட நீரை சுகாதாரமான நீராக மாற்றலாம்" என்று தெரிவித்தனர்.
மேலும் பேசிய அவர்கள் " இந்த கருவிக்கு நீர் ஆதார் என பெயரிட்டுள்ளோம். இதை உருவாக்க ரூ.15,000 செலவானது. இந்த கருவியை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் பொருத்தினால் குளோரின் பயன்பாட்டை தவிர்க்கலாம். இதில் இருந்து பெறப்படும் குடிநீரை பருகினால் அது மனித உடலில் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவும் என நிரூபித்து காட்டியதால் எங்களுக்கு பரிசு கிடைத்தது" என்று தெரிவித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற இந்த மாணவர்களுக்கு ரூ.1.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு உதவும் விதமாக இஸ்ரேல் நிறுவனமும், ஆந்திர அரசும் இணைந்து ரூ.22 லட்சத்தை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது.