ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வரை 124 மைல் நீளத்தில் கீழ்பவானி பிரதான வாய்க்கால் மூலம் இரண்டு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிட கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகள் வழியாக விநாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி வியாழக்கிழமை மாலை சத்தியமங்கலம் அருகே மில்மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் கரை உடைந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள நெல், கரும்பு, வாழை பயிரிடப்பட்ட விவசாய விளைநிலங்களில் புகுந்து சேதமடைந்ததோடு ஐந்து கிராமங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் புகுந்தது.
இதையடுத்து பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்கரை அமைக்கும் பணி நவம்பர் 13ஆம் தேதி இரவுக்குள் நிறைவடையும்.
அதனால் சோதனை ஓட்டமாக நள்ளிரவில் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு கரை உடைப்பு சரி செய்த பகுதியில் தண்ணீர் கசிகிறதா எனக் கண்காணிக்கப்படும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: 3 ஆண்டுக்குப் பிறகு பசுமையாக காட்சியளிக்கும் பெரும்பள்ளம் அணை!