ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மொடச்சூர் சாலையில் பிரியா என்ற பெண்ணுக்குச் சொந்தமான துணிக்கடை இயங்கி வந்தது. இவரது கடையின் அருகில் எஸ்.டி.என்.காலனி பகுதியைச்சேர்ந்த லிங்கப்பன் என்பவர் ஸ்டீல்ஸ் மற்றும் பெயிண்ட் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், இன்று காலை லிங்கப்பன் வழக்கம்போல் தனது கடையை திறந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.7,500 பணம் காணமால் போயிருப்பதையும், மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டுள்ளதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் பக்கத்துக்கடையைச் சேர்ந்த பிரியாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து கடைக்கு வந்த பிரியாவின் கணவர், அவரின் துணிக்கடையை திறந்து பார்த்தபோது அவர்களது கடையின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கடையின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் பாதியளவு குறைத்துள்ளதையும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.17,500 பணம் கொள்ளையடிக்கப்பட்டுருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றத்தடுப்பு காவல்துறையினர் கொள்ளையர்கள் வந்த தடங்கள் குறித்தும், மேற்கூரை பிரிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தடவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.