ஈரோடு: ஈரோடு அருகே 54 வயதுடைய மத்திய அரசு ஊழியர்தான் பாம்பிடம் நாக்கை நீட்டியதால் அவதிக்குள்ளானவர். இது தொடர்பாக வெளியான தகவலையடுத்து அவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் மருத்துவமனையை அணுகிய போது, நோயாளியின் தனிப்பட்ட தகவல்களை தர முடியாது என்றும் விழிப்புணர்வுக்காக சிகிச்சை விவரங்களை மட்டும் தருவதாக ஒப்புக் கொண்டனர்.
மருத்துவர் செந்தில்குமரன் இது குறித்து நம்மிடம் விவரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் மருத்துவமனைக்கு நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரை அழைத்துவந்தவர்களை விசாரித்த போது பாம்பு நாக்கை கடித்ததால் அதனை துண்டித்ததாக கூறியுள்ளனர்.
நாக்கில் பொதுவாகவே ரத்த ஓட்டம் அதிகம் என்பதால் ரத்தக்குழாய் துண்டிக்கப்பட்டு அதிகமான ரத்தம் வெளியேறியது. அத்துடன் பாம்பின் விஷமும் உடலில் பரவத் துவங்கியிருந்தது. இக்கட்டான நிலையில் சிகிச்சை அளித்து, அவரை காப்பாற்ற போராடியதாக விவரிக்கிறார் மருத்துவர் செந்தில் குமரன்.
நாக்கிலிருந்து வெளியேறிய ரத்தம் மூச்சுப்பாதையை அடைத்ததால் மூச்சு விடவும் சிரமப்பட்ட அந்த நபருக்கு , செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் விஷமுறிவு மருந்தும் அளித்து, அறுவை சிகிச்சையும் செய்து நாக்கை திரும்ப ஒட்ட வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 7 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர். அந்த நபர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி விட்டார் என மருத்துவர் கூறியுள்ளார்.
நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் அளித்த தகவலின் படி, அவருக்கு கனவில் அடிக்கடி பாம்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தனது வீட்டாரிடம் கூறிய போது ஜோதிடர் ஒருவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டுள்ளனர். அவர் இந்த குடும்பத்தை ஈரோட்டில் பாம்பு புற்று வைத்து வழிபடும் சாமியார் ஒருவரிடம் அனுப்பியுள்ளார்.
கனவில் வந்த பாம்பின் அடையாளங்களை கேட்ட சாமியார், அது கண்ணாடி விரியன்தான் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதே கண்ணாடி விரியனை வைத்து பூஜை செய்து மன்னிப்பு கேட்டால் தான் நாகம் சாந்தி அடையும் என கூறியுள்ளார் சாமியார். காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என அச்சுறுத்திய பூசாரி, உடனே பூஜைக்கு ஏற்பாடு செய்ய கூறியிருக்கிறார். அச்சமடைந்த குடும்பத்தினர் பூஜைக்கு ஒப்புக் கொண்டதாக கூறினர்.
பூஜைக்கான செலவு பேக்கேஜை பேசி முடித்த சாமியார், குறிப்பிட்ட நாளில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புடன் பூஜைக்கு ஆஜரானார். மந்திரங்கள் எல்லாம் கூறி பூஜை முடிந்த பின்னர் பாம்பின் முன் நாக்கை நீட்டி மூன்று முறை ஊத கூறியிருக்கிறார். முதல் 2 முறை பொறுத்துப்பார்த்த பாம்பு மூன்றாவது முறை நாக்கை கடித்துள்ளது.
இதனை பார்த்த பூசாரி அவரை விஷம் பரவாமல் காப்பாற்றுவதாக கூறிக் கொண்டு கையில் இருந்த கத்தியால் நாக்கை துண்டித்துள்ளார். இதன் பின்னர் நடந்தது அனைத்தும் மருத்துவத்துக்கே சவால் விடும் விதத்தில் அமைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கனவில் பாம்பு வந்தால் விபரீதம் நிகழுமா மூடநம்பிக்கைகளுக்கு காரணம் என்ன என்பதை அறிவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகாவை அணுகினோம். இது குறித்து விளக்கம் அளித்த அவர்,தூங்குவதற்கு முன் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவிலும் வரும், இதில் அச்சப்படுவதற்கு ஏதுமில்லை என விளக்கினார். கனவில் வந்ததற்கு பரிகாரம் செய்வது அடிப்படையற்ற மூட நம்பிக்கை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: வீடியோ; பெண்கள் எதையும் அணியாமலேயே அழகாக இருப்பார்கள் - பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து