ஈரோடு அருகே தண்டவாளப் பகுதியில் தொடர்ந்து கற்களை வைத்து சரக்கு ரயில்களை கவிழ்க்க முயற்சித்ததையடுத்து தொடர்ந்து கடந்த 30 நாள்களுக்கு மேலாக ரயில்வே காவல் துறையினர் தண்டவாளப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் தண்டவாளப் பகுதியையொட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் குடியிருப்புப் பகுதி மக்களுக்கான விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது குடியிருப்புப் பகுதி மக்கள் தண்டவாளத்தை தங்களது பாதையாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்துகையில் ரயில்கள் வந்தால் அதில் மாட்டிக்கொண்டு உடல் ஊனமோ, விலை மதிப்பற்ற உயிரையோ இழக்க நேரிடலாம் என்றும் சிறுவர், சிறுமியர்களை தண்டவாளம் பகுதியில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், தண்டவாளப் பகுதியில் அத்துமீறுவது ரயில்வே சட்டப்படி குற்றமென்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாலும், ரயில் பயணத்தைப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பானதாக அமைந்திட அனைவரும் ஒத்துழைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.