ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானிசாகர் அணை நாட்டிலேயே மிகப்பெரிய மண் அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மற்றும் கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் தனது முழுக்கொள்ளவான 105 அடியை எட்டியது.
இதனையடுத்து அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு மூன்றாயிரம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கொடிவேரி அணையின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தடுப்பணை அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.
விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்திருந்தபோதும் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சில சுற்றுலாப் பயணிகள் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதியில் சமைத்து சாப்பிட்டு தண்ணீர் விழும் அழகை ரசித்து சென்றனர். அணைப்பகுதியில் அமைந்திருந்த தற்காலிகக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டதால் அப்பகுதியிலுள்ள சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், சத்தியமங்கலம்,கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய நான்கு வட்டாரங்களிலும் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கி மீன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கல்குவாரியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு; தாய் கண் முன்னே நேர்ந்த துயரம்!