ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் முகமது ரபி. இவரது 17 வயது மகன் முகமது பிலால் பிறந்தது முதல் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் நடக்க முடியாமல் இருந்துள்ளார். இச்சிறுவனுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முகமது பிலாலிற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்வதால் கோவைக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, தான் குடியிருக்கும் ஊரான நம்பியூர் பகுதியில் உள்ள மயானத்தில் சிறுவனின் உடலை தகனம் செய்ய முகமது ரபி தன் மகனின் உடலை எடுத்துவந்தபோது, கரோனா தொற்றினால்தான் சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று அச்சமடைந்த அப்பகுதி மக்கள், நம்பியூர் மயானத்தில் சிறுவனின் உடலை தகனம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், வருவாய் துறை, காவல் துறை உயர் அலுவலர்கள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் எவ்வித சமாதானத்தையும் ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், உடலை தகனம் செய்ய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சிறுவனின் உடலை மாற்று மயானத்தில் தகனம் செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுத்ததையடுத்து, இரவு 9 மணியளவில் தொடங்கிய இப்போராட்டம் அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
இதையும் படிங்க:காவல் துறை எச்சரித்ததால் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!