நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முதற்கட்டமாகப் பயன்பாட்டுக்கு வந்தன. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்திலும் முதலில் முன்களப் பணியாளர்ளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயதுக்குள்பட்ட இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈரோட்டில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என 24 மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
தற்போது கரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதன்படி ஈரோடு மாவட்டத்திலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடுப்பூசி போட விருப்பம் உள்ள பொதுமக்கள் அந்தந்த மையத்துக்கு நேரடியாகச் சென்று தங்களது ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து தடுப்பூசி போட்டுவருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45 ஆயிரத்து 335 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி காந்திஜி ரோட்டிலுள்ள மகளிர் மகப்பேறு மருத்துவமனையில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.