தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு கண்காணிப்பு, வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோவை பிரிவில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சத்தியமங்கலத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கிவந்த வங்கி பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு பாதுகாப்பு அலுவலர்களுடன் கொண்டு செல்லப்பட்ட ரூ.91 லட்சம் ரொக்கத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததினால் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.91 லட்சம் ரூபாய் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பண்ணாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான வங்கி கணக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகரில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளதாகவும், அப்பணத்தை ஈரோட்டில் உள்ள மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாற்றம் செய்ய கொண்டு செல்லப்பட்டதாகவும், பணத்திற்குறிய ஆவணங்கள் வங்கி அலுவலர்கள் பின்னால் வருகின்ற காரில் எடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.91 லட்சம் ரூபாய் திரும்ப வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டது.