ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த வடுகபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் ஏராளமானோர் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர். தினந்தோறும் இப்பகுதிகளில் இருக்கும் பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிகளுக்கு ஏற்றிச்செல்ல பள்ளி வேன்கள் இயங்கப்படுகின்றன.
இதையடுத்து பள்ளி நாளான இன்று (அக்.10) புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்களை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு, பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. புஞ்சைபுளியம்பட்டி அருகே வடுகபாளையம் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி வேன், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வேனில் இருந்த மாணவ மாணவிகள் அச்சத்தில் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு சென்ற அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள், பள்ளி வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவ மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில், வாகன ஓட்டுநர் மற்றும் பள்ளி வேனில் இருந்த மாணவ மாணவியர்கள் பெரும் சேதமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதில் லேசான காயங்களுடன், வேறொரு பள்ளி வாகனம் மூலம், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்தில் சிக்கி லேசான காயங்களுடன் தப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி சார்பில் முதலுதவிகள் வழங்கப்பட்டது. விபத்து நிகழ்ந்த இடத்தில் புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறுகிய சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற போது, பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை இடது புறமாக ஒதுக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, கிரேன் இயந்திரத்தின் உதவியுடன், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியார் பள்ளி வாகனத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இது போன்ற சம்பவங்கள் இனித் தொடராமல் இருக்க அப்பகுதியின் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.. குடிக்காடு கிராம விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!