நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்துக்கு குறுக்கே மாயாறு ஓடுகிறது. மாயாற்றை தாண்டி தான் மக்கள் கிராமத்துக்குள் செல்ல முடியும். மாயாற்றை மக்கள் பரிசலில் கடந்து செல்கின்றனர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கின் போது மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் கடப்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அக்கிராமத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அங்கு மக்களின் அவலநிலையை கண்டு புதியதாக விசைப்படகு வாங்கித்தருவாக உறுதியளித்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை செங்கோட்டையன் தனது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பிலான விசைப்படகை கிராமமக்கள் முன்னிலையில் தெங்குமரஹாடா ஊராட்சித் தலைவர் சுகுணா மனோகரனிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து செங்கோட்டையன் கூறுகையில், "நான் கடந்த மாதம் இங்கு வந்தபோது இங்குள்ள மக்கள், படகு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் பெட்ரோலில் இயங்கும் விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு பேர் பயணிக்கலாம். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். நன்கு பயிற்சி பெற்றவர் மூலம் விசைப்படகு இயக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு.. பாப்பட்டான் குழல் நோம்பி!