ஈரோடு: சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், நம்பியூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கடன் பெற்றுத் தருவதாகவும், அந்தப் பணத்தை தனது நிறுவனத்தில் முதலீடாக்கி ஒவ்வொரு மாதமும் வட்டித்தொகையை தருவதாகவும் கூறி, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் பொதுமக்களிடம் ஆதார் அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளார்.
அவரை நம்பி முன்வந்த 36 பேரை, அரசு ஊழியர்களைப்போல் நடிக்கவைத்து அதற்கான ஆவணங்களைத் தயார் செய்து பெருந்துறை, சங்ககிரி, கரூர் ஆகியப் பகுதிகளில் உள்ள மூன்று தனியார் நிதி நிறுவனங்களில் ஒவ்வொருவரின் பெயரிலும் 2 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார்.
அதில் 10 விழுக்காடு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதித் தொகைக்கு மாதாந்திர வட்டித் தருவதாக சர்புதீன் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஓராண்டு கழிந்த நிலையில் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்றவர்களிடம் அலுவலர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கடந்த ஏழு மாதங்களாக சர்புதீனை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சர்புதீன் அரசு ஊழியர்கள் போல ஆள்களை நடிக்க வைத்து போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஜூலை. 23) புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டல்