ஈரோடு மாவட்டம் கீழ்வாணியில் கடந்த ஆண்டு சக்திவேல் என்பவர் கடத்தப்பட்டதாக ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. சக்திவேல் கடத்தல் வழக்கில் நீராவி முருகன் என்பவருக்கு தொடர்புள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனிடையே, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நீராவி முருகனை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் சக்திவேலை காவல் துறையினர் மீட்டனர்.
ஆனால் நீராவி முருகன் பிடிபடவில்லை. அவனது கூட்டாளிகள் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீராவி முருகன் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வள்ளியூர் சென்று தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது, காரில் வந்த நீராவி முருகன், மரியரகுநாத் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது கொலை செய்யும் நோக்கத்துடன் காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். அதன்பின், காவல் துறையினர் தற்காப்புக்காக வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு நீராவி முருகனை கைது செய்தனர்.
தற்போது பவானியில் தீவிர விசாரணையில் உள்ள நீராவி முருகன் மீது ,ஈரோடு, திருப்பூர் ,சென்னை , தூத்துக்குடி, திருநெல்வேலி மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களில் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அனைத்து வழக்குகளிலும் தண்டனை கிடைக்கும் வகையில் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி முருகன் சிறையிலிருந்து வெளி வராத வண்ணம் அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் தண்டனை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம் பெண்: கல்குவாரியில் சடலமாக மீட்பு!