ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள லட்சுமி நகர் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைச் சாவடியைக் கடக்கும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டு உரிய விசாரணைகளுக்குப் பிறகே வாகனங்களை அனுப்பிவைக்கின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்திலிருந்து வந்த காரை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், காரை சோதனை செய்தனர். அதில், 336 மது பாட்டில்கள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர், இது குறித்து மது விலக்கு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மது விலக்கு காவல் துறையினர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு குமலன்குட்டைப் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. ஊரடங்கின் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக நாமக்கல்லில் இருந்து கொண்டுவந்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரிடமிருந்த 336 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மதுபான குடோனில் மதுபாட்டில்கள் திருட்டு: இருவர் கைது!