ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். பெயின்டரான இவர் கடந்த எட்டாம் தேதி, அதே பகுதியிலுள்ள மது கடையில் தனது நண்பர் செந்தில் உட்பட நான்கு பேருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, செந்திலுடன் வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் சண்டையாக மாறியது. இதனையடுத்து, செந்தில் தன்னிடமிருந்த கத்தியால் மஞ்சுநாதனை குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மஞ்சுநாதன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மஞ்சுநாதன் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்கு பதிவு செய்த சூரம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாஸ்திரி நகரைச் சேர்ந்த செந்தில்குமார், சதாசிவம், தாமோதரன், முருகன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.