ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு முற்றிலுமாக குறைந்துள்ளதால் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்ட எல்லைப் பகுதிகள், சோதனைச்சாவடிகளில் காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் நுழையும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர்.
இரண்டு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளிடம் வாகன உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டும், எந்தக் காரணத்திற்காக வாகனம் ஈரோட்டிற்குள் செல்கிறது, வாகனங்களில் செல்பவர்களின் முகவரி ஆகியவை பதிவு செய்யபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வாகன அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனரா? வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறித்த சோதனைக்குப் பிறகே நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றது.
லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் சரக்கு விபரம், எங்கு கொண்டு செல்லப்படுகிறது, எங்கிருந்து வருகிறது, வாகன அனுமதிக் கடிதம் பெறப்பட்டிருக்கிறதா போன்றவை குறித்த சோதனைக்குப் பிறகுதான் லாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே வெளி மாவட்டங்களிலிருந்து வரும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், வாகன அனுமதிக் கடிதம் பெறாத வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகப்படும் வகையிலான வாகனங்களின் எண்கள், உரிமையாளர் விபரம், ஓட்டுநர் விபரம், தொழிற்சாலை அல்லது நிறுவனத்தின் முகவரி தொடர்பு எண் ஆகியவை சேகரிக்கப்பட்ட பின்பு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதுமுள்ள 30க்கும் மேற்பட்ட மாவட்ட எல்லைகள் மற்றும் சோதனைச்சாவடிகள் அனைத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஈரோடு கரோனா சிறப்பு கண்காணிப்புக் குழு இணை இயக்குநர் ஆய்வு!