மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி, கடந்த பல ஆண்டுகளாக 'தமிழ்நாடு' விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சரும் இதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், இந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழ்நாடு விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் உள்பட 15 பேர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலையணிவிக்க சென்ற போது, தேசத்துரோக வழக்கில் கைது செய்து காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வீரப்பன் சத்திரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டிய தமிழ்நாடு விழாவைக் கொண்டாடியோரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொழிலன் உள்ளிட்ட 15 பேரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யவும், தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் அவரது சிலைக்கு மாலையணிவிக்க தடை விதிக்கப்பட்டதையும் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.
பின்னர், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.