ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் மலைப்பகுதி கிராமங்கள், நகரப் பகுதிகள் என எவ்வித வித்தியாசமுமின்றி நோய்த்தொற்று எண்ணிக்கை பரவலாகவே உயர்ந்து வருகிறது. பெருந்துறை மருத்துவமனையில் மட்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு 1349 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 19க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் அந்தந்த பகுதியில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மருத்துவமனையின் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இன்று ஒரே நாளில் 35 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி தனிமைப்படுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.