ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வினோபாநகர் வனப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் குண்டேரிப்பள்ளம் அணைக்கும், கொடிவேரி தடுப்பணை அருவிக்கும் விழாக்காங்களிலும், விடுமுறை நாள்களிலும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அணைப்பகுதிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி பல இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில், இன்று (நவம்பர் 15) விடுமுறை தினம் என்பதால் பொழுதுபோக்கு இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். அப்போது, சாலையோரங்களில் உள்ள வயல்வெளிகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தது மட்டுமின்றி வினோபாநகரில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு சென்று மலைகளையும் அங்கு தண்ணீர் அருந்த வரும் யானை, மான் காட்டெருமை, போன்ற வனவிலங்குகளையும் கண்டு ரசித்தனர்.
அதே போல், கொடிவேரி தடுப்பணை அருவியில் குவிந்த மக்கள், பவானி ஆற்றிலிருந்து அருவிபோல் கொட்டும் தண்ணீரை ரசித்துவிட்டு அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை சாப்பிட்டு மகிழ்ந்தனர். கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தடையை மீறி ஒருசிலர் பரிசல் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை பொதுப்பணித்துறையும் கடத்தூர் காவல்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.