ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து, அறிவுரைகள் வழங்கிவருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் அதனை கண்டுகொள்ளாமல் வெளியிடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலைகளில் கரோனா வைரஸ் ஓவியங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர்மேடு கிராமத்தில் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் 30க்கும் மேற்பட்ட ஓவியர்கள் ஒன்றிணைந்து சாலையில் கொடூர உருவம் போல் காட்சியளிக்கும் கரோனா வைரஸ் ஓவியத்தை வரைந்துள்ளனர். மேலும் இந்த ஓவியத்தின் கீழே ‘விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு’ என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு ஓவியத்தை நம்பியூர் காவல் ஆய்வாளர் மகாலிங்கம், கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஓவியர்களை வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்