ஈரோடு:பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல் பயிரிடுவதற்காக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பவானிசாகர், சத்தியமங்கலம், உக்கரம் உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது நெற்கதிர்கள் முற்றியதால் இன்று(ஜன 25) பவானிசாகர் பகுதியில் நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளது.
வாடகை அதிகரிப்பு
இதற்கென கிருஷ்ணகிரி, ஆத்தூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் துவங்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நெல் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேர வாடகை ரூ.3000 கட்டணமாக இருந்த நிலையில், தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.300 அதிகரித்து 3300 ரூபாய் நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.
இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே நெல் பயிரிட ஆள் கூலி, உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட சாகுபடி செய்வதற்கு செலவு செய்துள்ள நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுப்பு செய்து அறுவடைக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு டீசல் மானியம் வழங்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் - விரட்டியடித்த வனத்துறையினர்