மஞ்சள் மாவட்டம் என பெயர் பெற்ற ஈரோடு மாவட்டம் வறட்சியின் பிடியிலிருந்து மீண்டு நடப்பாண்டில் அமோகமான விளைச்சலைத் தந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பாயும் காவிரி, பவானி ஆறு, பவானி சாகர் அணை மூலம் பாசனநீர் தரும் கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால், அதன் கிளை, கொப்பு வாய்க்கால் என மனிதனின் ரத்த நாளங்கள் போல மாவட்டத்தின் நீர் வழிப்பாதையாக அமைந்துள்ளது.
கீழ்பவானியில், 2.07 லட்சம் ஏக்கர், காளிங்கராயனில் 14 ஆயிரம் ஏக்கர், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்குகூட நடப்பாண்டில் மழை பெய்யாததால் விளைநிலம் மட்டுமல்ல, குடிநீர், கால்நடை தீவன உற்பத்திகூட பாதிக்கப்பட்டன.
தடுப்பணை முதல் விவசாயக் காப்பீடு வரை கேட்டும் அரசுத் தரப்பில் இயன்ற உதவியைச் செய்தாலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாழ்க்கை இல்லை. அவர்களது வாழ்வில் பெருமகிழ்ச்சி இல்லையென்றாலும் வாழ்க்கையைக் கடத்த முயன்றனர்; வசந்தம் பெறவில்லை.
ஆனால், தற்போது விவசாயிகளின் வாழ்வில் மட்டுமல்ல அவர்களது முகத்திலும் புதுவசந்தம் பூத்துள்ளது. கடந்த பல மாதங்களாக பவானி சாகர் அணையின் நீர் இருப்புக் குறையாமல் திருப்தியான நிலையில் இருப்பதால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய் பாசனம், காளிங்கராயன் பாசன கால்வாய்களில் தொடர்ந்து தண்ணீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இதனால், அம்மாவட்டம் முழுவதும் கால்வாய், நீர்நிலைகளை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் முதல்போக விவசாயப் பணியினை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு அறுவடையை திருப்திகரமாக மேற்கொண்டனர். சென்ற ஆண்டை விடவும் இந்தாண்டு அனைத்துப் பகுதி விவசாயிகளும் தண்ணீர் தட்டுப்பாடின்றி தங்களது விவசாயப் பணியை உற்சாகத்துடன் மேற்கொண்டனர். இதில், தங்களுக்கு விருப்பமான பயிர்களைப் பயிரிட்டு அதற்கான முழுப் பலனையும் பெற்றனர்.
முதல்போகத்தில் செய்த அறுவடையின் பலனாகக் காளிங்கராயன் பாசன கால்வாய் விவசாயிகள் இரண்டாம்போக விவசாயப் பணியினை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர். முதல்போகத்தில் மாவட்ட வேளாண்மைத் துறையினர் பரிந்துரைத்ததன்பேரில் பொன்னி அரிசியை விடவும் அதிகளவில் விளையும் கோ 50, 51 வகை நெல் பயிர்களைப் பயிரிட்டனர். இதில் வழக்கத்தைவிட அதிகளவிலான அறுவடை கிடைத்ததால் அதே பயிரை தற்போதும் பயிரிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குடியிருப்புகளுக்கு நடுவே குப்பைக்கிடங்கு - நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?