கோபிசெட்டிபாளையம், கூடக்கரை, நம்பியூர், மூணாம்பள்ளி ஆகிய பகுதிகளில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் கூடுதல் பள்ளிக் கட்டடங்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “தனியார் பள்ளிகளைப் போலவே அரசு பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி பெற ஆன்லைன் வகுப்புகள் ஜூலை 13ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கல்வியாளர்கள், அறிஞர்கள் அளித்த ஆலோசனையின்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பழைய பாடத்திட்டமே கொண்டுவந்து நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் 5 பாடங்களுக்கான வகுப்புகள் தனித்தனியாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். குறிப்பாக மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கிய நாளில் இருந்து இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.
இந்தாண்டு கல்வித்துறைக்கு கூடுதல் சலுகைகள் கரோனா காலத்திற்கு பிறகு அறிவிக்கப்படும். மேலும் 12ஆம் வகுப்பில் 34,482 மாணவர்கள் கடைசி தேர்வு எழுதவில்லை. அதில் 720 பேர் மட்டுமே தேர்வு எழுதுவர். தேர்வு எழுதிய பிறகு நான்காவது நாளில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதுபோல நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையிலும் 7 ஆயிரம் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!