வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெங்காய சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு வெங்காய வரத்து தமிழ்நாட்டிற்கு வெகுவாகக் குறைந்து போனதால் வெங்காயத்திற்கு திடீரென கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
வரத்து குறைந்து தேவை அதிகமானதால் வெங்காயம் 1 கிலோ 140 ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசின் மூலம் வெங்காயம் வரவழைக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறையின் சார்பில் கூட்டுறவுத் துறை அங்காடிகளில் பெரிய வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சியின் தொடக்க விழா ஈரோட்டில் நடைபெற்றது.
பேருந்து நிலைய சிந்தாமணி கூட்டுறவு சங்க விற்பனை அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு குறைந்த விலை விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைவான விலையில் வெங்காயத்தை விற்பனை செய்திடும் வகையிலும் கூட்டுறவுத் துறையின் மூலம் பெரிய வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கான விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 5 டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கூட்டுறவுத் துறை அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் நாளை (அக்டோபர் 30) முதல் பசுமை அங்காடிகள், உழவர் சந்தைகளிலும் குறைந்த விலை வெங்காயம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தளவே வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளதால் ஒருவருக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படுகிறது. நாளை முதல் அதிகளவில் வெங்காயம் வரவழைக்கப்பட்டு கூடுதலாக வழங்கப்படும். வரத்து குறைந்துள்ளதாலேயே வெங்காயத்தின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் வெங்காய பதுக்கல் நடவடிக்கை எதுவுமில்லை.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை யூரியா உள்ளிட்ட வேளாண்மை தொடர்பான எந்தப்பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை அனைத்துப் பொருட்களும் தேவையான அளவு இருப்புள்ளதாக தெரிவித்தார்.