ஈரோடு: விழுப்புரம், கண்டாச்சிபுரம் தாலுகா, ஒடுவாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், தேவராஜ். இவர் தனது மனைவி தேவி மற்றும் மகள் புவனேஷ்வரி ஆகியோருடன் கடந்த 4 ஆண்டுகளாக கோபி அருகே காமராஜ் நகரில் உள்ள தனியார் நூல் மில் விடுதியில் தங்கிப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தேவராஜ் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பாயாள் என்பவர், தனது ஆடு ஒன்று மில் வளாகத்தில் உள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகவும், கிணற்றில் இருந்து ஆட்டை வெளியே எடுத்து கொடுத்தால் 500 ரூபாய் தருவதாகவும் கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து தேவராஜ், சுப்பாயாளிடம் இருந்த கயிறை கிணற்றின் அருகே உள்ள தடுப்புச் சுவரில் கட்டிக்கொண்டு 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
கிணற்றில் 20 அடி ஆழத்திற்குத் தண்ணீர் உள்ள நிலையில் பாதி தூரம் இறங்கிய போது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். தவறி விழுந்ததில் நீரில் மூழ்கிய தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இது குறித்து கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் சிறுவலூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தகவலறிந்த வந்த கோபி தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி கிணற்றின் பக்கவாட்டில் இருந்த ஆட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் நீரில் மூழ்கி பலியான தேவராஜின் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Video: மதுபோதையில் மயங்கியவரிடம் ஆட்டைய போட்ட நபர்.. வைரலாகும் வீடியோ!