ரமலான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலத்திலிருந்து பதப்படுத்தப்பட்ட உயர் ரக மல்லிகைப்பூக்கள் விமானம் மூலம் துபாய், சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டது. சத்தியமங்கலத்தில் விளையும் பூக்களுக்கு அந்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால் இரண்டு டன் பூக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்களைப் பறித்துச் சென்று சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. சத்தியமங்கலம் மலர் சந்தையில் இருந்து கேரளா திருவனந்தபுரம்,மாண்டியா, மைசூரு, சிமோகா ஆகிய இடங்களுக்கு வேன் மூலம் மல்லிப்பூக்கள் அனுப்பப்பட்டன. இதற்கிடையே, பிரத்யேகமான முறையில் பூக்கள் பேக் செய்து வேன் மூலம் கொச்சின் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத், ஜெட்டா மற்றும் துபாய்க்கு அனுப்பப்படுகிறது.