ஊரடங்கு உத்தரவால், மூடப்பட்ட மதுபானக் கடைகள் 7ஆம் தேதி திறக்கப்பட்டன. இதனால், மகிழ்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாது, தங்களுக்குப் பிடித்த மதுபானங்களை வாங்கிச் சென்றனர். எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்றதுதான் நிதர்சனம். மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாநிலம் முழுவதும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.
மதுபானக் கடை திறப்பால், கொண்டாட்டத்தில் துள்ளிக் குதிக்கும் மது பிரியர்களின் செயல்களை தமிழ்நாட்டு மக்கள் கண்டு ரசித்துதான் வருகின்றனர். அந்தவகையில், ஈரோட்டில் மதுப்பிரியர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது. குடியால், மனிதன் தன் சுயநினைவை இழந்து தவிப்போரை பார்த்திருக்கிறோம், ஆனால் இப்படியும் ஒருவரா என்று கேட்க வைத்துள்ளார் அந்த மதுப்பிரியர்.
ஈரோட்டில் ஒரு டாஸ்மாக் கடை முன்பு மது வாங்க வந்த கூலித்தொழிலாளி ஒருவர், "என்னிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளது. வீட்டு பத்திரம் வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு மது பானம் தாங்க. கரோனாவால் இரண்டு மாதங்களாக மது அருந்தாமல் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. தூக்கம் வரவில்லை.
டாஸ்மாக் திறப்பது தெரிந்ததும், ஆயிரம் ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். வீட்டு பத்தரம் தர வேண்டுமா ஆதார் கார்டு வேண்டுமா யார் காலில் வேண்டுமானாலும் விழட்டுமா, தயவு செய்து குவார்ட்டர் மட்டும் கொடுங்க. எங்களால், அரசாங்கம் நஷ்டமடையக் கூடாது" என்று கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து மதுபானக் கடைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுக்கடைகளை மூட டாஸ்மாக் உத்தரவு!