ஈரோடு மாவட்டத்தில்1989, 1990களில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் நண்பர்களை சந்திப்பது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் தாங்கள் படித்த பெரியகொடிவேரியில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் சக நண்பர்களுடன் பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என நினைத்தனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது குடும்ப அங்கத்தினர்களுடன் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி மகிழ்ந்தனர்.
பாடம் கற்பித்த ஆசிரியர்களை மேடை ஏற்றி ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவித்தனர். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து, முன்னாள் மாணவ-மாணவிகளின் பிள்ளைகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி, கலை நிகழ்ச்சியையும் நடத்தினர். மேலும், தாங்கள் பயின்ற வகுப்பறைக்குச் சென்று ஆனந்தம் அடைந்தனர். இந்தச் சந்திப்புகளை நினைவுகூறும் விதமாக பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு, அனைவரும் ஒன்றுசேர்ந்து அறுசுவை உணவருந்தி மகிழ்ந்தனர்.