ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கெட்டிசெவியூர் அருகே அரளிமலை பிரிவுவை சேர்ந்த தம்பதி ஆண்டியப்பன் - முனியம்மாள். விவசாயம் செய்து 40க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளையும் வளர்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு கோழிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளார். இதனால் கோழிகள் அடைத்து வைக்கப்பட்ட குடிசையை சுற்றி இரவு நேரங்களில் இரும்பு கம்பியை வைத்து மின் இணைப்பு கொடுத்து வந்துள்ளார்.
நேற்று இரவும் வழக்கம் போல ஆண்டியப்பன் மின் இணைப்பு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இன்று (அக்.31) அதிகாலையில் கோழிகளுக்கு தீவனம் வைப்பதற்காக முனியம்மாள் சென்றுள்ளார். மின் இணைப்பு கொடுத்திருப்பதை அறியாமல் இரும்பு கம்பியில் கால் வைத்ததும் முனியம்மாள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். முனியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற போது ஆண்டியப்பனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நம்பியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்கம்பியால் தம்பதி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்!