ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் அருகே உள்ள மல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ (23). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ., படித்துக்கொண்டிருந்தார். அதே கல்லூரியில் திருச்செங்கோட்டை சேர்ந்த ரம்யா (23) என்பவரும் படித்துக்கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் காதலித்துவந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி பவானியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புக் கேட்டு பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
காவல் துறையினர் இரண்டு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமரசம் பேசியுள்ளனர். ஆனால் ரம்யாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் இளங்கோவின் பெற்றோர் இருவரையும் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அங்கே இருந்துகொண்டு இளங்கோ மட்டும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரம்யாவுக்கும் இளங்கோவுக்கும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (செப். 28) நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த இளங்கோவின் பெற்றோர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது இளங்கோ ரம்யா இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்து கிடந்ததைக் கண்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஆப்பக்கூடல் காவல் துறையினர் இருவரது சடலத்தைக் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் இளங்கோ, ரம்யாவின் போன்களை பறிமுதல்செய்த காவல் துறையினர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் குறித்து கோபி கோட்டாட்சியர், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.