ஈரோடு: மைசூரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் ஆக. 24ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
மைசூரு, சாமுண்டி மலை அருகே தனது காதலருடன் சாமுண்டி மலைக்குச் சென்று விட்டு அப்பெண் திரும்பிய நிலையில், மது அருந்தி விட்டு அவ்வழியே சென்ற கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து, பெண்ணின் காதலரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் தப்பி ஓடியுள்ளனர்.
தற்போது அந்த பெண் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரின் காதலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக ஹால்நள்ளி காவலர்கள் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர்
இந்த வழக்கில், கர்நாடக சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ஒருவருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவயிடத்தில் தடயங்களை கைப்பற்றிய கர்நாடக காவலர்கள், முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்த சூசைபுரத்தில் செல்போன் டவர் லோக்கேசன் காட்டியதால் குற்றவாளியை பிடிக்க சனிக்கிழமை (ஆக. 28) அதிகாலை கர்நாடக தனிப்படை காவலர்கள் தாளவாடியில் முகாமிட்டனர்.
அதிகாலையில் முகாம்
சூசைபுரம் வீட்டில் குற்றவாளி பதுங்கியிருப்பதை உறுதி செய்த கர்நாடக காவலர்களை, தமிழ்நாடு காவல்துறை உதவியுடன் அங்கிருந்த வாழைக்காய் கூலித்தொழிலாளி பூபதியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவரிடம் கர்நாடக காவலர்கள் நடத்திய விசாரணையின் போது அளித்த தகவலின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் சேவூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகளான ஜோசப், பிரகாஷ், முருகேசன் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என நால்வரை கர்நாடக காவலர்கள் அடுத்தடுத்து கைது செய்தனர்.
பல குற்றங்களில் ஈடுபட்டவர்
இது குறித்து, கர்நாடக டிஜிபி பிரவீன் கூறுகையில், "தாளவாடியில் விளையும் வாழைக்காய்களை ஏற்றிக்கொண்டு பூபதி அடிக்கடி மைசூரு செல்வது வழக்கம். சாமுண்டி மலையில் நடந்த பல்வேறு குற்றங்களில் பூபதி உடந்தையாக செயல்பட்டுள்ளார். மேலும், இவர் மீது மைசூரு நீதிமன்றத்தில் திருட்டு வழக்கு ஒன்று உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலர் அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையிலும் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளோம். இந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும்." என்றார்.
இதையும் படிங்க: புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!