ஈரோடு கனிராவுத்தர்குளம் அருகே உள்ள நந்தவன தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மனைவி அப்ரோஸ்பேகம். இந்த தம்பதியின் இளைய மகன் முகமது யாசின் சின்ன சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறான்.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் முகமது யாசின் செய்த செயல் ஒன்று மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. அதவாது பள்ளியின் இடைவேளையின்போது வெளியே வந்த யாசின் சாலையோரம் பை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளான். அதை எடுத்து பார்த்தபோது அதனுள் பணம் இருப்பதை கண்டு அப்பையை தனது ஆசிரியரிடம் ஒப்படைத்தான்.
அப்பணத்தை ஆசிரியர் எண்ணிப்பார்த்தபோது அதில் 50 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷிடம் சென்று பணத்தை ஒப்படைத்தனர்.
மாணவனின் நேர்மை கண்டு வெகுவாகப் பாராட்டிய சக்தி கணேஷ் யாசினுக்கு தேவையான நோட்டு, புத்தகப்பை, காலணி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.
பின் இது குறித்து செய்திகள் வெளியானதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் யாசினை நேரில் அழைத்து தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கியதோடு அவனது உயர் கல்விக்கு ஆகும் செலவை தானே ஏற்பதாகத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து திரைத் துறையினர் மட்டுமல்லாமல் பல்வேறு சமூக அமைப்பினரும் சிறுவனின் நேர்மையை கவுரவித்தனர். இந்நிலையில் முகமது யாசினின் செயலை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகம் இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் "நேர்பட ஒழுகு"என்ற தலைப்பில் பாடமாக வைத்துள்ளனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத யாசினின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியதுடன் சிறுவனின் செயலுக்கு அங்கீகாரம் அளித்த பள்ளிக் கல்வித் துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். ஆசைப்படக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்துடன் திகழ்ந்த சிறுவன் முகமது யாசினை ஆசியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது பாரட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.