ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சந்தித்துப் பேசினார். அப்போது மலையாளி இன மக்கள் தங்களுக்கு இதர வகுப்பினர் என வருவாய்த்துறை மூலம் சான்று வழங்கப்படுவதாகவும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தங்களது உறவினர்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், எனவே எங்களுக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வகுப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கத் தமிழ்நாடு அரசு மூலம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மோடி தலைமையிலான அரசின் கையில்தான் அது உள்ளது, இந்த ஆட்சியில் முடியாவிட்டாலும், 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்படும், அதைத்தொடர்ந்து மலையாளி மக்களுக்குப் பழங்குடியினர் சான்று பெற்றுத் தரப்படும் என மலைக்கிராம மக்களிடம் ஆ.ராசா உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, "தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்ட நிலையில், இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். பாஜக தேர்தலில் மைனாரிட்டியாக வெற்றி பெற்று மற்ற வெற்றி அடைந்த கட்சிகளை உடைத்து ஆட்சி அமைப்பது, மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ, பாஜகவுக்கோ புதிதல்ல.
மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆட்சி மாறும். பொது சிவில் சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார். திமுக 90களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது ராமர் கோயில் கட்டக்கூடாது, பொது சிவில் சட்டம் கொண்டு வரக் கூடாது என்பதை வலியுறுத்தியது. திமுக கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற சோதனைகளுக்கு இந்தியாவில் எந்த கட்சிகள் அஞ்சினாலும், திமுக இதற்கெல்லாம் அஞ்சாது. தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் சிறிய பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக நீதியை வலியுறுத்தும் விதமாக புதுமையான உளவியல் பாங்கினை மாமன்னன் படம் வலியுறுத்தி உள்ளது. மக்களிடத்தில், தங்களை மேல் சாதி என கருதிக் கொண்டிருக்கும் மனிதர்களாக இருந்தாலும், கீழ் சாதி என கருதிக் கொண்டிருக்கும் மனிதர்களாக இருந்தாலும் அவர்களது மனோபாவம் மாற வேண்டும். உளவியல் பார்வை மாற வேண்டும்.
இதைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி என அனைவரும் சொன்னார்கள். என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும், என்னை விட பிறப்பால் தாழ்ந்தவன் இல்லை, நான் தாழ்த்தவும் மாட்டேன் என்ற தத்துவத்தை உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் முன் வைத்திருக்கிறார். இந்த கருத்தை பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் திராவிட மாடல் முன் வைத்ததாகக் கருதி அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெளியானது 'ஜெயிலர்' பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!