ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிரதான சாலைகளிலேயே கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் புகையினால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்துக்களும் ஏற்படுகின்றன.
சின்னியம்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சின்னியம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சரிவர அப்புறப்படுத்தாமல், பிரதானச் சாலையில் கொட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இதன் காரணமாக அலுவலகத்தில் பணியாற்ற முடியவில்லையென்றும், குப்பைகளில் உற்பத்தியாகும் ஈ, கொசு உள்ளிட்ட பூச்சிகளின் தொந்தரவு காரணமாக அலுவலகங்களில் பணியாற்ற முடியவில்லை என்றும் அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே பிரதான சாலையில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் குப்பைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி தீ வைத்துவிடுவதால், தீயிலிருந்து வெளியேறும் துர்நாற்ற புகையால் பிரதான சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், கடும் புகையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
குடியிருப்புப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் பிரதான சாலைப் பகுதிகளில் கொட்டாமல், குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.