ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜி.வி.மணிமாறனை ஆதரித்து நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு திமுக இளைஞர் அணி மாநில செயலர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரையின்போது அவர் பேசியதாவது:
பழனிசாமி தோற்பது உறுதி
எடப்பாடி தொகுதியில் பழனிசாமி தோற்கப்போவது உறுதி. உதயசூரியன்தான் அங்கு வெற்றி பெறப்போகிறது. அதேபோல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனை தோற்கடிக்க வேண்டும்.
வரும் சில நாள்கள் தொண்டர்கள் அனைவரும் சாப்பாடு, தூக்கம் குறித்த எண்ணம் இல்லாமல் திமுக வெற்றிக்காக பாடுபடவேண்டும். நான் எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறேனோ, அதைவிட ஆயிரம் வாக்குகள் அதிகப்படியான வித்தியாசத்தில் மணிமாறனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மோடிக்கு என் மீது கோபம்
மோடி உங்கள் மீது மட்டுமல்ல, என் மீதும் கோபத்தில் உள்ளார். தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்தவர்களை ஓரம் கட்டி குறுக்கு வழியில் நான் வந்தேன் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி, நீங்கள் குஜராத் முதலமைச்சராக இருந்து எந்தனை பேரை ஓரம் கட்டிவிட்டு வந்தீர்கள் தெரியுமா? அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, வெங்கைய நாயுடு என நீண்டுகொண்டே செல்கிறது பட்டியல். சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு வந்தவர்தான் மோடி.
அதேபோல் சசிகலாவின் காலைப் பிடித்து குறுக்கு வழியில் முதல்வரானார் பழனிசாமி. அவரை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா?
எய்ம்ஸ் மருத்துவமனையைத் தேடுகின்றனர்
1,600 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அடிக்கல் நாட்டினார்கள். ஆனால் ஒரு செங்கல்லை மட்டும் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அந்த ஒரு செங்கல்லையும் நான் எடுத்து வந்துவிட்டேன். நான்கு நாள்களாக மருத்துவமனையைக் காணவில்லை எனத் தேடி வருகின்றனர்.
அதிமுகவில் உள்ள அனைத்து அம்மாவாசைகள், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் முடிவுகட்ட வேண்டும்.
பத்தாயிரம் கோடியில் நாடாளுமன்ற வளாகம் கட்டுகின்றனர். இது யார் காசு? மோடியின் அப்பன் வீட்டு காசா? கரோனா காலத்தில் மக்கள் செத்துகொண்டிருக்க 16 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய சொகுசு விமானங்களை பிரதமர் வாங்குகிறார்.
ஆன்லைன் வகுப்பு குளறுபடிகளால் மாணவர்கள் தற்கொலை
மாணவர்கள் பெற்றோர்களைக் குழப்ப செங்கோட்டையன் மாதிரி ஒரு அமைச்சர் இனி பிறந்துதான் வரணும். கரோனோவை விட அதிகமாக பயமுறுத்தியது செங்கோட்டையன்தான். அவரது டார்ச்சர் தாங்காமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆன்லைன் வகுப்பில் இருந்த குளறுபடிகளால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாத்தி மாத்திப் பேசி மாநில உரிமை, கல்வி உரிமை என எல்லா உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டனர்.
இந்தப் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பனை தொழிலாளர்களுக்கு நலவாரியம், விவசாய மும்முனை மின்சாரம் என அனைத்தும் செய்து தரப்படும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் தாய் மீதான விமர்சனம்; திமுக- காங்கிரஸிற்கு பிரதமர் மோடி கண்டனம்!