ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நகைக்கடன் உள்பட பல்வேறு பிரிவுகளின் சார்பில் 25க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணியம், ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளை முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார். மக்கள் நலன் கருதி ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். மற்ற மாநிலங்கள் பாராட்டும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆடி 18 அன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் நடைபெற இருக்கிறது. இந்த விழா காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து 14 தொலைக்காட்சிகளில் பள்ளிப் பாடங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி, பெற்றோர்களுடன் ஒப்புதல் பெற்ற பிறகுதான் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பாதிப்பு தற்போது அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு இல்லை. அதன் தாக்கம் குறைந்த பிறகுதான் பள்ளிகள் திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள் படிப்படியாக வழங்கப்படும். தற்போது வரை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 1 முதல் 5, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடுத்த மாதம் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு