ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத்தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் 70ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அடங்கிய அரிசி வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு கனிராவுத்தர் பகுதியை அடுத்துள்ள ஞானபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, 'தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கையால் தான் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. கரோனா பாதிப்பில் 2ஆவது மாவட்டமாக இருந்த ஈரோடு, தற்போது பச்சை மண்டலத்திற்கு மாறியதற்கு மக்கள் தான் காரணம்.
கரோனா பாதிப்பின் காரணமாக, ஒரு சில மாணவர்கள் வெவ்வேறு மாவட்டத்தில் உள்ளனர். அவர்கள் இருக்கும் மாவட்டத்திலேயே தேர்வு எழுதுவதற்கு பரிசீலனை செய்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 19ஆம் தேதி தெளிவான அறிக்கை மூலமாக வெளியிடப்படும்.
தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் தேர்வுகள் முடிவுபெற்று விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றுதான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் அம்மாவட்ட ஆட்சியர் சென்று பார்வையிட வேண்டும். நீட் தேர்வைப் பொறுத்தவரையில் 2 வாரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்த உடனே 15 நாள்களுக்கு ஒரு முறை தேர்வு நடைபெறும். அதில் 3000 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவர்களின் உயிரைவிட தேர்வு ஒன்றும் முக்கியமல்ல!