ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் பேரூராட்சி, சிறுவலூர் மற்றும் வெள்ளாங்கோயில் ஊராட்சிகளில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிராமப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் பார்வையிட்டு உள்ளாட்சி அமைப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தூய்மைப்பணியாளர்களுக்கும் கரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து சிறுவலூரில் அமைந்துள்ள முதல்நிலை ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களுடன் ஆலோனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கரோனாவை முழுமையாக தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்களில் செயல்படும் மருத்துவமனைகளில் தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முழுமையாக தடுக்கும் வகையில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பொதுமக்கள் குறிப்பிட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்லாமல், அரசின் அறிவிப்புகளை அறிந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறப்படுவது முழுமையாக தெரியவில்லை" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பசியால் வாடும் குழந்தைகளையும், ஏழைத் தொழிலாளர்களையும் மத்திய அரசு மறந்துவிட்டதா?'