ஈரோடு: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு, காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அவர் வகித்த மின்சாரத் துறை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது.
தற்போது செந்தில் பாலாஜி வசமிருந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியையும் தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கி இருக்கிறது, திமுக தலைமை. இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளுக்காக புதிய வாகனங்களை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இழப்பீடு கொடுப்பது குறித்து கடந்த ஆட்சியில் திட்டத்தின்போது சரியாக செய்யவில்லை. இனி இது தொடங்கப்படும்போது விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும். கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதற்கு கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகள் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், அவர்களை சமாதானம் செய்து கட்டுமானப் பணிகளை செய்ய வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது. பல இடங்களில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார். மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். எனவே பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கு வலியுறுத்தி உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே செந்தில் பாலாஜி செய்து வந்த பணியின் தொடர்ச்சிதான் என்றார். கோவையில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என திட்டமிட்டு செய்து கொண்டிருந்ததை, தற்போது அவர் விட்டுச் சென்ற பணிகளை அப்படியே தொடர்வேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஜெயலலிதாவை பின்பற்றியதால்தான் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி - ஆர்.எஸ்.பாரதி